Saturday 10 September 2016

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள்


கீழ்வாலை கிராமத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள் பராமரிப்பின்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கீழ்வாலை என்னும் இடத்தில் (விழுப்புரம் மாவட்டம்) விலங்கு முக மனிதஓவியங்கள் கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும்காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின்முகங்களாக அமைந்துள்ளன. விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல்என்னும் வேட்டைச் சடங்குகளைப்பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக்கருதலாம்.
குதிரையின் மீது மனிதன் அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம்காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவைமுகங்களாகவே காணப்படுகின்றன.
இவைகளில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும்பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.


இவ் ஓவியங்கள் இரும்புக்கால ஓவியங்கள் எனவும், பெருங்கற்கால ஓவியங்கள் எனவும் தொல்லியல்துறை அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. புதுச்சேரி மாநில முன்னாள் தலைமை செயலாளர் பி.எல்.சாமி, இக்குகை ஓவியங்களுக்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்பிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடையாநத்தம் அருகில் உள்ள விசிறிப்பாறை, ஆலம்பாடி பாறை ஓவியங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் துறை ஆய்வேடுகளில், இந்தியாவின் மிக முக்கியத்துவம் மிக்க தொல்லியல் இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் புகழ்பெற்ற இடங்களாக குறிக்கப்படுவதில் திருவக்கரை கல்மரங்களைத் தவிர மற்றவை 600 ஆண்டுகளுக்குட்பட்டவை என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.ஆண்டுக்கொருமுறை இந்த இடங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கும்படியான விழிப்புணர்வு ஓவியப்போட்டிகளை நடத்தி, மனித வரலாற்றுத்தொன்மையை மாணவர்கள் அறிய மாவட்ட கல்வித்துறையும், நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குகை ஓவியங்கள் அமைந்துள்ள பகுதி பராமரிப்பின்றி இருக்கின்றது. இந்த இடத்தினைப்பற்றி குறிப்பிடும் தகவல் பலகையும் உடைந்து போய் தற்போது, சமூக விரோதிகளின் புகலிடமாகவும் விளங்குகிறது.வரலாற்று சிறப்பு மிக்க குகை ஓவியங்கள் அமைந்துள்ள இந்த இடங்களை உரிய பராமரிப்புடன் பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment