Saturday 10 September 2016

ஆதித்த கரிகாலன் (இராஜராஜ சோழனின் அண்ணன்)!!




ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்.

ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.


குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

No comments:

Post a Comment